- Back to Home »
- சிறுவர் கதைகள் »
- சிங்கமும் புத்திசாலி முயலும்
Posted by : gatherpage
Wednesday, March 14, 2018
ஒரு ஊரில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் பல வகையான மிருகங்களும் பறவைகளும் வாழ்ந்து வந்தன. அக் காட்டில் பெரிய குகை ஒன்று இருந்தது. அதில் காட்டுக்கே ராஜாவாக பெரிய சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. இந்த சிங்கம் தனது பசிக்கு காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடி உண்பதை வழக்கமாகக்கொண்டிருந்தது. ஒரு நாளில் பல மிருகங்களையும் வேட்டையாடி உண்ணும் இந்த சிங்கத்தால் காட்டில் உள்ள அனைத்து மிருகங்களும் பயத்தால் நடுங்கிக்கொண்டே காலத்தைக்கடத்திக் கொண்டிருந்தன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல மிருகங்களை இந்த சிங்கம் வேட்டையாடிக்கொண்டுவருவதால் தமது உறவுகளை இழந்துகொண்டே வருவதை அனைத்து மிருகங்களும் கவலையுடனும் பயத்துடனும் வாழ்ந்து வரும் வேளை இதற்கு ஒரு முடிவை எடுப்போம் என அனைத்து மிருகங்களும் கூடி யோசித்து “ஒரு நாளைக்கு ஒருவரை சிங்கத்தின் குகைக்கு நாமாகவே அனுப்பிவைப்போம்” என முடிவெடுத்து அனைத்து மிருகங்களும் சிங்கத்தின் குகைக்கு முன் சென்று சிங்கத்தை அழைத்தன.
சிங்கம் பெரிய சத்தத்துடன் கர்ஜித்துக்கொண்டு குகைக்கு வெளியே வந்து நின்றது. இதைக்கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து நடுங்கிக்கொண்டு நின்றன. அதில் ஒரு பெரிய மிருகம் சிங்கத்தைப்பார்த்து “சிங்க ராஜாவே நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளோம் நீங்கள் ஒவ்வொரு நாளும் வேட்டையாட காட்டுக்குள் வந்து கஸ்ரப்பட்டு வேட்டையாடி பசியை தீர்ப்பதற்கு பதிலாக நாங்களே ஒவ்வொரு வராக ஒவ்வொரு நாளும் தங்களது குகைக்கே வருகின்றோம்” என பயத்துடனும்ää புத்திசாலியாகவும் கூறியது.
சிங்கமும் தமது இடத்திற்கே உணவு ஒவ்வொரு நாளும் வரும் என்பதை எண்ணி இவ் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து அனைத்து மிருகங்களையும் பார்த்து “இதற்கு நான் சம்மதிக்கின்றேன் ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக எனது பசிக்கு ஏற்றவராக உரிய நேரத்திற்கு தாமதிக்காமல் அனுப்பிவைக்க வேண்டும்” எனக்கூறியது. அதற்கு பதிலளித்த பெரிய மிருகம் “கட்டாயமாக உரிய நேரத்திற்கு எங்களில் இருந்து ஒருவர் தங்களது குகைக்கு அனுப்பிவைக்கப்படுவர்” என கூறியது. அதைக்கேட்டதும் சரியென்றவாறு அந்த முரட்டு சிங்கம் குகைக்குள் சென்றது.
இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மிருகம் குகைக்கு சென்று அவ் முரட்டு சிங்கத்தின் பசியைத்தீர்த்தது. இப்படி ஒவ்வொரு மிருகமும் அந்த முரட்டு சிங்கத்திற்கு இரையாகிக்கொண்டிருக்கää அடுத்து முயல் செல்ல வேண்டிய காலம் வந்தது. அப்போது யார் செல்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போது அப்பா முயல் “நான் செல்கின்றேன்” என்றது. அதைக்கேட்டதும் அம்மா முயல் “நான் செல்கின்றேன்” என்றது. இதைக்கேட்ட முயல் குட்டிக்கு பெரும் கவலை. “நீங்கள் யாரும் செல்ல வேண்டாம் நானே செல்கின்றேன்” என்றது இதைக்கேட்ட அம்மாää அப்பா முயல் பெரும் கவலையுடன் “வேண்டாம் நீ செல்ல வேண்டாம்” என்றது. அதற்கு குட்டி முயல் “நான் செல்வேன் ஆனால் மீண்டும் வருவேன் கவலையின்றி இருங்கள்” எனக் கூறி வேகமாக சென்றது. ஒரு மரத்தடியில் இருந்து யோசித்து விட்டு அந்த முரட்டு சிங்கத்தின் குகைக்குச் சென்றது.
குட்டி முயலைக்கண்ட சிங்கம் கோபத்துடன் கர்ஜித்துக்கொண்டு குட்டி முயலைப்பார்த்து “இவ்வளவு நேரமும் என்ன செய்தாய்? எனக்கு கடுமையான பசி வரும்வரை காக்க வைத்து விட்டாய்” என கோபத்துடன் கூறிக்கொண்டு முயலுக்கு முன் வந்து நின்றது. இதைக் கேட்ட முயல் குட்டிக்கு நடுங்கியது எனினும் இதனைக்காட்டிக்கொள்ளாமல் சிங்கத்தைப்பார்த்து குட்டிமுயல் “சிங்கராஜாவே நான் சிறியவனாக இருப்பதால் தங்கள் பசிக்கு ஈடாகமாட்டேன் இதனால் என்னைப்போல் மூவர் என்னுடன் வந்தனர். வரும் வழியில் உங்களைப்போல் பெரிய சிங்கம் ஒன்று நின்றது. அது நீங்கள் அனைவரும் வேகமாக எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டது அதற்கு நாங்கள் எங்கள் சிங்கராஜாவின் குகைக்கு இரைக்காக செல்கின்றோம் எனக் கூறினோம். அதற்கு அந்த சிங்கம் என்னைவிட பெரியவன் இங்கு யாரும் இல்லை நான் தான் பெரியவன் எனக்கூறிக்கொண்டு அவ் மூவரையும் கடித்து தின்றுவிட்டது நான் அதனிடமிருந்து தப்பிவந்துவிட்டேன்” என்றது.
அதைக்கேட்ட சிங்கராஜாவிற்கு கடும் கோபம் வந்தது. குட்டி முயலைப்பார்த்து “எங்கு என்னைவிட பெரிய சிங்கம் இருக்கிறது என்னைக்கூட்டிச்சென்று காட்டு” எனக்கூறியதும் குட்டி முயல் சிங்கராஜாவினை காட்டின் ஒரு பக்க மூலையில் இருந்த பெரிய கிணற்றிற்கு கூட்டிச்சென்று கீழே பாருங்கள் என்றதும் சிங்கம் கர்ஜித்துக்கொண்டு கிணற்றை எட்டிப்பார்த்தது. அப்போது அதன் குரலே எதிரொலியாக மீண்டும் அந்த சிங்கத்திற்கு கேட்டது மட்டுமன்றி அதன் உருவம் கிணற்று நீரில் அப்படியே தெரிந்தது. அதைப் பார்த்த அந்த சிங்கம் என்னைப்போல் இன்னொருவனா என கோபம் கொண்டது. அதற்கேற்றாற்போல் குட்டி முயலும் “பார்த்தீங்களா சிங்கராஜா உங்களையே பார்த்து கர்ஜிக்கின்றது” எனக்கூறியதும் மிகுந்த கோபத்துடன் கிணற்றிற்குள் குதித்தது அந்த சிங்கம்.
குதித்த சிங்கத்திற்கு கிணற்றினுள் இருந்த பெரிய கல் சிங்கத்தின் தலையில் குத்தியதும் சிங்கத்தின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தோடி இறக்கும் தருவாயில் இருந்தது. அப்போது மேலே இருந்த முயல்குட்டி சிங்கத்தைப்பார்த்து “இதுவரைகாலமும் இக்காட்டில் எத்தனை மிருகங்களை துடிக்க துடிக்க வேட்டையாடியிருப்பாய். இப்போது அந்த வலியை நீ அனுபவி” என கூறி பெரும் சந்தோசத்துடன் இவ் மகிழ்ச்சியான செய்தியை காட்டிற்குள் அனைத்து மிருகங்களையும் அழைத்து கூறியது. குட்டி முயலின் அம்மா, அப்பா மட்டுமன்றி அனைத்து மிருகங்களும் குட்டி முயலை கட்டித்தழுவியதுடன் ஆனந்தத்தில் குதித்து விளையாடின.




